Friday 27 December 2013

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - மனம் 2

மனமும்,விழிப்புணர்வும் 
மனம் நம்  நண்பனாக வேண்டுமானால் நாம் அதனோடு இணக்கமான உறவு  கொண்டிருக்கவேண்டும்.இணக்கமான உறவு இருந்தால் மட்டுமே அதன்  அனைத்து முகங்கள் ,பரிமாணங்களையும் அறிய முடியும்.அதன் பின்னே தேவையான மாற்றங்களைச் செய்ய முடியும்.

எப்படி????........ பார்க்கலாம் .

புத்தரிடம் ஒருமுறை ஒரு சீடர் "இன்பம்,துன்பம் என்றால் என்ன? அதன் உண்மை நிலை என்ன?"

"நம் பார்வையில் தான் உள்ளது.இருந்தாலும்,கொஞ்சம் விளக்குகிறேன்.
உன் சுய இயல்புக்கு உடன்பாடாக நடந்தால் வருவது இன்பம்,உன் சுய இயல்புக்கு  மாறாக நடந்தால் வருவது துன்பம்".

"சரி அப்படி என்றால் நம் மனம் போன போக்கில் நடப்பது என்று அர்த்தமா?"

"இல்லை.முதலில் நீ என்றால் என்ன? நீ உன் பெயரா,உடலா, பிராணனா மனமா எது நீ என்று கண்டுபிடி .ஞானிகளின்  கூற்றை அப்படியே நம்பாதே, வெறும் புத்தகங்களைப் படித்து விட்டுப் பிதற்றாமல் உன் சொந்த அனுபவத்தில் அவற்றை அறிந்து கொள்.அப்பொழுது  மட்டுமே நான் என்றால் என்ன என்று முதன்முறையாக அறிய வருவாய் .அந்தத் தெளிவு ஏற்பட்ட பின் நான் கூறியதை (உன் சுய இயல்புக்கு உடன்பாடாக நடந்தால் வருவது இன்பம்,உன் சுய இயல்புக்கு  மாறாக நடந்தால் வருவது துன்பம்") மறுபரிசீலனை செய்து பார்."

சட்டமோ,சமூகமோ நம்மைத் தண்டிக்காது என்ற ஒரு நிலை வந்தால் நம்மில் எத்தனை பேர் உண்மையான ஒழுக்கத்தோடு இருப்போம்?.உள்ளபடியே எனக்கு ஒழுக்கத்தில் உடன்பாடு இல்லை.ஒழுக்கம் ஒரு காலத்தில் நம் சுபாவமாக மாறினால் சரி ஆனால் நாம் மரணம் வரை ஒழுக்கத்தை ஒரு பயிற்சியாகவே செய்து வருகிறோமே அன்றி ஒழுக்கம் உள்ளவர்களாக இல்லை.உதாரணமாக, நான் குளித்து 10 நாட்கள் ஆகின்றன என்று வைத்துக்கொள்வோம் ஒரு கோட் வாங்கி அணிந்து கொள்கிறேன் என் உடலைத் தாண்டி நாற்றம் வெளியில் அதிகம் வராமல் அந்த கோட் தடுக்கிறது.மீண்டும் 10,20 நாட்கள் குளிக்கவில்லை இன்னும் ஒரு கோட் அதன்மேல் அணிந்து கொள்கிறேன். முன்போல்,இந்தப் புதிய கோட்டும் நாற்றம் வெளியில் அதிகம் வராமல் தடுக்கிறது.ஆனால,உள்ளுக்குள் நான் கெட்ட நாற்றம் வீசுபவனாகவே இருக்கிறேன்.இது போல் நாம் ஒருவரை விஞ்சி ஒருவர் நல்லவராகக் காண்பித்துக்கொண்டும்,நடித்துக்கொண்டும் இருக்கிறோமே தவிர  உண்மையில் நாம் அவ்வாறு இல்லை.

ஏன்.??

ஒழுக்கம் ஊருக்கு ஊர்,சமயத்திற்குச் சமயம் மாறுபடும்.புத்த மதத்தில் மட்டும் 13,000 க்கும் அதிகமான செயல் திட்ட ஒழுக்க முறைகள் உள்ளன என்று ஓஷோ கூறுகிறார்.

பல்லாயிரம் ஆண்டுகள் இருளடைந்த ஒரு அறைக்குள்ளோ,குகைக்குள்ளோ    ஒரு மெழுகுவர்த்தியோ ஒரு விளக்கோ ஏற்றினால் அந்த ஒளி சுடர் விட்டுப்  பிரகாசிக்க பல நாட்களோ ,அதிகநேரமோ பிடிக்காமல் உடனே அதன் ஒளி  அங்கு பரவி வெளிச்சம் தரும்.அதுபோல், விழிப்புணர்வு ஒன்றே உண்மையான ஒழுக்கம்.பல புத்தகங்கள்,அறிவுரைகளைப் பின்பற்றிப்  பல  நூறு ஒழுக்க விதிகளைப் பின்பற்றுகிறேன் என்று இயல்பு மீறி வாழக்கூடாது.

உங்களில் ஒருவரின் கைரேகை இந்த உலகில் இப்போது உள்ள, இதற்கு முன் வாழ்ந்த யாருடனும் பொருந்தாது.உங்களைப்போல் இன்னொருவர் இல்லை, உலகில் ஒருவரைப்போல் இன்னொருவர் என்றுமே இருந்ததில்லை. எனவே, பொதுவான ஒழுக்கம் என்று ஒன்றே கிடையாது.ஒவ்வொருவரும் வேறு, வேறு மனோ இயல்பு கொண்டவர்களாக இருக்கிறோம்.

முன் பதிவில் கூறியபடி,அவரவர் கர்ம வினை மனதின் அடியாழத்தில் பதிந்துள்ளது இதையே சம்ஸ்காரம் என்கிறோம்.அது இறைநியதிப்படி உரிய காலங்களில் எண்ணமாகவும், சொல்லாகவும், செயலாகவும் பரிணமிக்கிறது.இதைப் புரிந்து கொண்டு மனதில் நன்கு இருத்த வேண்டும்.
எல்லாமே,கர்மாவின் படியே நடக்கிறதென்றால் பின் ஆன்மீகத்தில் பல மகான்கள் நம்மை விட மிக மேலான நிலைகளை எட்டி இருக்கிறார்களே என்ற கேள்வி எழுவது நியாயமே.அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத வாழ்க்கையில்,எந்த வகையான முன்னேற்பாட்டைச் செய்துவிட முடியும்,எந்த வகையானஒழுக்கத்தின் மூலம் சரியானபடி   வாழ்ந்து விடமுடியும்.

ஒழுக்கம் ஒரு தற்காலிகமான உதவி ,ஆனால் விழிப்புணர்வு கர்ணனின் கவசம் போல் நம்முடன் எப்போதும் இருந்து உதவும் அதோடு மட்டுமின்றி மேலும் கர்மப் பதிவுகளை பெருக்கிக் கொள்லாமல் இருக்கவும் உதவும்.

தனியாக வீட்டில்  இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.பெரிய வீரன்,மெத்தப்படித்தவன் என யாராக இருந்தாலும் சரி,என்ன செய்வோம், உடனே டிவியை ஆன் செய்வோம் அல்லது பேப்பர் ,புத்தகம் என படிப்போம் ஆனால் சும்மா இருக்க  நம்மில் எத்தனை பேரால் முடியும். நண்பர்கள், உறவினர்கள் உட்பட யாருடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசும்,நேரம் செலவிடும்  நாம் நம்முடன் நேரம் செலவிடுவது கிடையாது. ஏனென்றால் நம்மைக் கண்டு நமக்கே பயம்.

ஏனென்றால்,நாம் பிறர் முன் நமது நல்ல முகத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம்.ஆனால் ,தீய பதிவுகள்,எண்ணங்கள் நமக்குள் அப்படியே உள்ளதால் நாம் தனிமையில் இருக்கும் போதும்,தியானம் செய்யும் போதும் அந்த சம்ஸ்காரங்கள் மேல் எழுந்து வருகின்றன.இவற்றை நாம் தவம் செய்து அழிக்காத வரை நமக்கு மன அமைதி கிட்டாது. சரி,இதற்கு, என்ன செய்யலாம்?
தியானம் செய்யும் சமயம் இந்த வகையான சிந்தனைகள் வந்தால் அவற்றோடு சண்டையிடாமல்,உடன்படாமல் அந்த எண்ணங்களை சும்மா கவனித்தாலே போதும்.அவை வெளியேறி அவற்றின் வீரியம் குறைந்து விடும்.ஆங்கிலத்தில் சொல்வதென்றால் AT MEDITATION HOURS ''NEITHER CO-OPERATE ,NOR CONDEMN YOUR THOUGHTS" .

ஆரம்பத்தில் இது ஒரே நாளில் கைவராவிட்டாலும், தொடர்ந்த பயிற்சியினால் இது கைவரும்.

குழப்பமான மனநிலையில் எடுக்கும் முடிவுகள் குழப்பத்தையே கொண்டு வரும்.இது வரை பல்லாயிரம் பேரைத் தவறாக எண்ணியிருப்போம், கோபத்தில் அடிக்க அல்லது திட்ட நினைத்திருப்போம் ஆனால் செய்திருக்க மாட்டோம் அதன் பதிவுகள் அடுத்து எவர் மேலாவது காமமோ, கோபமோ வந்தால் முன்னதாக அடக்கிவைத்துள்ள காமம்,கோபத்தின் எஞ்சிய பதிவுகளுடன் சேர்ந்தே வெளிப்படும் எனவே நம்மால் அந்த உணர்வுகளை கவனமாகக் கையாள முடிவதில்லை.முந்தைய பதிவில் சொன்ன மூச்சைக்  கவனிக்கும் பயிற்சியை முறையாய்ச் செய்து வர வாழ்வைத் தெளிவுடன் நடத்தத் தேவையான விழிப்புணர்வும் அமைதியும் உண்டாகும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment