Tuesday, 2 January 2018

மந்திர ஜபம் நினைவில் கொள்ள வேண்டியவை


நமக்கான சரியான உபாசனை தெய்வத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது ?



நம் ஜாதகப்படி எந்தத் தெய்வத்தை வழிபட்டால் நம் வாழ்வு வளமாகும் எனக் கண்டறிந்து வழிபடுவது நிச்சயமான வெற்றியும்,உயர்வும் தரும்.


குறிப்பிட்ட பிரச்சனைகள் தீரவும்,குறிப்பிட்ட இலட்சியங்கள் நிறைவேறவும் எந்தத் தெய்வ வழிபாடு உதவும் எனக் கண்டறிந்து வழிபட வேண்டும்.


மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம். முடிந்தால் 90 நாள் ஜெபத்தின் பின் ஹோமம், தர்ப்பணம், மார்ஜனம், அன்னதானம் இவற்றை முறைப்படி செய்து முழு சித்தி பெறுதல் நலம்.



சங்கல்பம்,அங்க ந்யாஸம்,கர ந்யாஸம்,மூர்த்தி தியானம்,பஞ்சபூஜை, ஜபசமர்ப்பணம் இவற்றைக் கற்றுக் கொண்டு முறைப்படி ஜெபித்து வந்தால் நிறைவான பலன்கள் கிட்டும்.


ஒவ்வொரு தெய்வத்திற்கும் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள், விசேஷமான நாட்கள்,நட்சத்திரங்கள், திதிகள், கிழமைகள், நைவேத்தியம், ஆடை மற்றும் அதன் நிறம்,விரதம்,எவ்வளவு எண்ணிக்கை ஜெபிக்க வேண்டும்,எந்தத்திசை நோக்கி ஜெபிக்க வேண்டும்,ஜபம் செய்யவேண்டிய நேரம் காலையா,மாலையா ,இரவா மற்றும் உபாசனையின் பொழுது கடைபிடிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன அவற்றைக் குருவிடம் கேட்டறிந்து அதன் படி செயல்பட்டால் மட்டுமே உத்தம சித்தி உண்டாகும்.




ஜெபம் சித்திக்கச் சரியான நேரத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது? 

ஜெபம் சித்திக்க சரியான நேரம் பார்த்து ஜெபத்தை ஆரம்பிக்க
 வேண்டும்.

நமது ஜனன ஜாதகப்படியும், கோச்சாரப் படியும் மந்திர சித்திக்கான நல்ல முகூர்த்த நேரமாகக் கணித்து,அந்த நேரத்தில் மந்திரஜபம் ஆரம்பிக்கவும்.

பஞ்சபட்சி சாஸ்திரப்படி படுபட்சி நாளைத் தவிர்க்கவும்.அந்த நாளில் துவங்கும் மற்றும் செய்யும் எந்தக் காரியமும் நிச்சயம் எதிர்பார்த்த பலனைத் தராது.

பஞ்சபட்சி சாஸ்திரப்படி நமக்கு  அதிகார நாளில்,அரசு நேரத்தில் ஜெபம் ஆரம்பிக்க அல்லது தொடர்ந்து அரசு நேரத்தில் ஜெபித்து வரத் தடையின்றி விரைவில் மந்திரம் சித்தியாகும்.

நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து குருவையும்,குலதெய்வத்தையும் 
வேண்டி, நாம் ஜெபிக்கும் மந்திரத்திற்கு உண்டான ரிஷி அல்லது சித்தரை வணங்கி  மந்திரம் சித்தியாக ஆசீர்வதிக்க வேண்டிக் கொள்ளவும்.


அதன் பின் மந்திரத்தின் தேவதையை  (தெய்வம்) வணங்கி ஜெபத்தை 
ஆரம்பிக்கவும்.


ஜபம் ஆரபிக்கும் நாளில் சங்கல்பம் செய்து கொண்டு குறிப்பிட்ட நாட்கள் அல்லது மாதம் என ஒரு காலம் நிர்ணயம் செய்து அதற்குள் மந்திர சித்திக்கான எண்ணிக்கையை ஜெபித்து முடிப்பது சிறந்த முறை.

கணக்கு இல்லாமல் மந்திரங்களை ஜெபிக்கக்கூடாது.

நாமும்,நம் இருப்பிடமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

ஒரு நேரத்தில் ஒரு தேவதையின் மந்திரம் என சங்கல்பம் செய்து கொண்டு  அதற்கென முடிவு செய்த நாட்களில் வேறு மந்திரத்தை ஜெபிக்காமல் மந்திரத்திற்குண்டான ரிஷியின் பாதகமலங்களை சிரசின் மேல் (சஹஸ்ராரம்) தியானித்து ,தன்னையே வழிபடும் தேவதையாகப் பாவித்து வர மந்திரம் சித்தியாவதுடன் உயர்ந்த பலன்களை தரும்.

அதிகாலை எழும்போதும்,உறங்கும் போதும் ரிஷியையும் தெய்வத்தையும் வணங்கி ஒரு நாளைத் தொடங்கவும் முடிக்கவும் செய்ய வேண்டும்.

தன்னையே தன்  உபாசனா  தெய்வமாக அல்லது குருவாகப் பாவித்துத்  தியானம் செய்து வர அவர்களின் தன்மை,சக்தி நம்மில் உண்டாகும் என தந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.வேதமும் ''யத் பாவ தத் பவதி'' என்கிறது இதன் பொருள் ''எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்'' என்பதாகும்.

குருபாதுகையை சிரசில் தியானித்து வர மந்திரம் விரைவில் சித்தியாகும்.

உபதேசம் பெற:

சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரத்தன்று ,கடகம் அல்லது விருச்சிக லக்னத்தன்று உபதேசம் பெற மிக சிறப்பாகும்.

குரு மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்கள் மற்றும் குரு எப்பொழுது தீட்சை  தருவதாக அழைத்தாலும் அந்த நேரம் சிறந்ததே.குருவின் மன இசைவே முக்கியம்.

தீட்சை தருபவருக்கும்,பெறுபவருக்கும் நல்ல நாள் நேரமாக அமைந்தால் அன்றிலிருந்தே வாழ்க்கை வளர்ச்சிப் பாதையில் செல்லத் துவங்கும்.


பெரும்பாலான மந்திரங்களுக்கு தேவர்கள்,முனிவர்கள்,ரிஷிகளின் 
 சாபங்கள் இருக்கும்.முறைப்படி சாபநிவர்த்தி செய்த பின் செய்யப்படும் மந்திர ஜெபமே முழுப்பலன் தரவல்லது

மந்திரங்களைத்  தீட்சை பெற்று ஜெபிப்பது நிறைந்த பலன்களைத்
தரும்.

மந்திர ஜபம் பற்றி ஆழமான பல விஷ்யங்கள் உள்ளன அவற்றைக்  குருநாதரிடம் நேரிடையாகக் கேட்டுத் தெளிவு பெறுவதே முறை.



வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல்    :  9442193072
வாட்ஸ் அப் :  9788493072

No comments:

Post a Comment