Saturday, 28 April 2018

சித்ரா பௌர்ணமி / புத்த பூர்ணிமா 29.04.2018


பௌர்ணமி ஆரம்பம் 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 6.58 முதல்
30.04.2018 திங்கள் கிழமை காலை 6.52 வரை


இன்று புத்தரின் 2580 வது பிறந்தநாள்.

புத்தர் பெருமான் பிறந்தது,ஞானம் அடைந்தது,சமாதியானதும் மிகச் சிறப்பு வாய்ந்த இந்த நாளில் தான்.

-------------------------------------------------
     
சித்ரா பௌர்ணமி வழிபாடு பற்றி இந்தக் கட்டுரையைப் படித்து அறிந்து கொள்ளவும்.

--------------------------
சித்ரா பவுர்ணமி நாளில் முறையாக விரதமிருந்து பவுர்ணமியை கொண்டாடினால் முன்னேற்றத்தின் முதற்படிக்குச் செல்ல இயலும்.

சித்திரையில் வரும் பவுர்ணமியைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதுமட்டுமல்ல நாம் செய்யும் பாவ புண்ணியங்களைப் பதிந்து வைக்கும் சித்ரகுப்தனையும் சிந்தையில் நினைத்து வழிபட்டால் அத்தனை காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.



திதி பார்த்து வழிபட்டால் விதிமாறும் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள். நமக்கு விதிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாவிட்டாலும், விதியின் வலிமையை கொஞ்சம் குறைக்கவாவது வழிகாட்டுவது திதியின் அடிப்படையில் நாம் வழிபடுகின்ற வழிபாடுகள் தான்.



சதுர்த்தி திதியில் ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். சஷ்டி திதியில் முருகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் விலகும். ஏகாதசி திதியில் பெருமாளை வழிபட்டால் பெருமைகள் வந்து சேரும். அஷ்டமி திதியில் கிருஷ்ணரை வழிபட்டால் கீர்த்திகள் உண்டாகும். நவமி திதியில் ராமபிரானை வழிபட்டால் நல்ல இல்லறம் அமையும். அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் கூடும். பவுர்ணமி திதியில் மலை வலம் வந்து சிவன், உமையவள், மால்மருகன் ஆகியோரை வழிபட்டால் மலைக்குமளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.


மாதம் தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை மட்டும் சித்ராபவுர்ணமி என்று சிறப்புப் பெயரிட்டு நாம் அழைப்பது வழக்கம். ராஜகிரகங்களாக விளங்கும் சூரியனும், சந்திரனும் உச்சம் பெற்று திகழும் அந்த நாளில் முறையாக விரதமிருந்து பவுர்ணமியை கொண்டாடினால் முன்னேற்றத்தின் முதற்படிக்குச் செல்ல இயலும்.


அன்றைய தினம் நாம், ‘மலையளவு செய்த பாவத்தை கடுகளாவாகக் குறைத்து எழுது என்றும், கடுகு அளவாகச் செய்த புண்ணியத்தை மலையளவாக உயர்த்தி எழுதுஎன்றும் சித்ரகுப்தனிடம் வேண்டிக் கொள்ள வேண்டுமாம். அப்பொழுதுதான் நமது பாவக்கணக்கின் அளவு குறைந்து, புண்ணியக் கணக்கின் அளவு உயரும் என்பார்கள். ஆனால் நாம் காலக் கணக்கை மாற்றி எழுதச் சொல்லக்கூடாது.


அதேசமயம் நாம் இன்று சித்ரகுப்தனுக்குப் பொங்கல் வைத்துப் படைத்து வழிபடுகின்ற பொழுது இனிமேல் நான் செய்யும் செயல்கள் புண்ணியம் தருவதாக அமைய நீ வழிகாட்டு. வாழ்க்கைப் பாதையை சீராகவும், நேராகவும், ஆக்கிக் கொடு. ஆயுள் வளரவும், ஆற்றல் பெருகவும், செல்வம் பெருகவும் வாசலைத் திறந்து வழியைக் காட்டு என்று வேண்டிக் கொண்டால் நமது வாழ்க்கைப் பயணம் சிறப்பாக அமையும்.


பூஜையறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து அருகில் வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்துசித்திரகுப்தன் படியளப்புஎன்றும் அதில் எழுதி வைப்பர்.


சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கிப் பொங்கல் வைத்து பொங்கல் பொங்கி வடியும் பொழுது சித்திர குப்தனைச் சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும். சர்க் கரைப்பொங்கல், வெண் பொங்கல், பச்சரிசிக் கொழுக்கட்டை, இனிப்புப் பலகாரங்கள் போன்றவற்றை இலையில் பரப்பி வைத்து, பழங்களில் பலாச்சுளை, திராட்சை, மாம்பழம், முழு நுங்கு போன்றவற்றையும் வைத்துப் படைக்க வேண்டும்.


அன்றைய தினம் வைக்கும் குழம்பில் கூட தட்டைப் பயிறும், மாங்காயும் சேர்த்து வைப்பது நல்லது. ஜவ்வரிசி பாயசம், அப்பளம் வைத்து, இளநீர், பானகம், நீர்மோர் போன்றவைகளையும் அருகில் வைத்து முத்தாய்ப்பாக நடுவில் கரகம் வைக்க வேண்டும்.


நமது வாழ்வில் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க பொங்கல் வைக்கின்றோம். கனிவாக வாழ்வமைய கனி வர்க்கங் களைப் படைக்கின்றோம். நவதான்யம் மற்றும் அனைத்துச் செல்வத்திற்கும் அதிபதியான குபேரனுக்கு இணையானவர் என்பதாலும் தட்டைப் பயறு வைக்கின்றோம். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற மாவிலை, கிரகங்கள் சாதகமாக விளங்க கரகம் வைத்து வழிபடுகின்றோம்.


பூமா தேவியால் பயிர் விளைவதால் தினமும் உணவு கிடைக்கவே வெண்கலக் கிண்ணத்தில் மண்ணும் தண்ணீரும் வைத்து அதன்மேல் தண்ணீர் நிரம்பிய செம்பின்மீது மாவிலைக் கொத்தும், மாங்காயும் வைப்பது வழக்கம். மற்ற கும்பங்களில் தேங்காய் வைப்பது வழக்கம். ஆனால் சித்ரகுப்தன் வழிபாட்டில் மாங்காய் வைப்பது தான் வழக்கம். அதன் அருகில் கோலமிட்டுக் குத்துவிளக்கேற்ற வேண்டும். பொங்கல் பொங்கி வரும்பொழுது சங்கு ஊதுவது அவசியமாகும். பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பவுர்ணமி தான். விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் இரவு நிலாப் பார்த்து வழிபட்ட பிறகு தான் உணவு அருந்த வேண்டும். நமது பாவ புண்ணியத்தையும் பதிந்து வைத்து அடுத்த பிறவிக்கு அனுகூலம் தரும் சித்ர குப்தனை வழிபட்டால் செல்வநிலை உயரும். தேவையானவைகள் தேவையான நேரத்தில் நடக்கும்.


இந்தச் சித்ரகுப்தனுக்கு காஞ்சீபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அருப்புக்கோட்டை அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலிலும் தனிச்சன்னிதி சித்ர குப்தனுக்கு உள்ளது. இங்கும் சென்று சித்ர குப்தனை வழிபட்டு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்


நன்றி -https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/04/09110330/1155931/chitra-pournami-viratham.vpf

No comments:

Post a Comment